மேச லக்னத்துக்கும், துலா லக்னத்துக்கும் ஒரு விசேசமான ஒற்றுமை உண்டு. இரண்டு லக்னத்துக்கும் லக்னாதிபதியே, எட்டுக்குடையவனாகவும் வரும் ஒற்றுமைதான் அது. இந்த இரண்டு லக்னங்களுக்கும் பலன் சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேச லக்னத்தில் பிறந்த ஒருவருக்குச் செவ்வாய் சிம்மராசியில் இருப்பதாக வைத்துக்கொண்டால், லக்னாதிபதி ஐந்தில் இருப்பதாகக் கொள்ள வேண்டுமா, அல்லது அட்டமாதிபதி ஐந்தில் இருப்பதாகக் கொள்ள வேண்டுமா என்பதில் தடுமாற்றம் வரக்கூடும். இதே போல் துலா லக்னத்தில் பிறந்த ஒருவருக்குச் சுக்கிரன் ஏழில் இருந்தால், லக்னாதிபதி ஏழில் இருக்கும் பலனைச் சொல்லவா, அல்லது எட்டுக்குடையவன் ஏழில் இருக்கும் பலனைச் சொல்லவா என்ற தயக்கம் வரக்கூடும்.
மேச லக்னத்துக்கு லக்னாதிபதி செவ்வாய் பதினோராமிடத்தில் கும்பத்தில் இருந்தாலோ, துலா லக்னத்துக்கு லக்னாதிபதி சுக்கிரன் சிம்மத்தில் இருந்தாலோ, அந்த ஜாதகத்தை மிகமோசமான ஜாதகம் என்று எமது தந்தையார் குறிப்பிடுவதுண்டு. பதினோராமிடம், பாதக ஸ்தானம் என்பதால் அல்ல. ஏனெனில் வராக ஹோரையில் பாதக ஸ்தானம் என்ற குறிப்பே கிடையாது. மேலேயுள்ள அம்சத்தைக் கொண்ட ஜாதகர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை என்பது அவரது முடிவு. (எமக்கு இதில் உடன்பாடு இல்லை). ஆனால் துலா லக்னத்தில் பிறந்து லக்னாதிபதி பதினோராமிடத்தில் இருக்கும் ஜாதகர்களைவிட மேச லக்னத்தில் பிறந்து, செவ்வாய் பதினோராமிடத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் துரதிருஷ்டசாலிகள் என்பது எமது கருத்து
ஏனெனில் கும்ப லக்னம் நல்லதல்ல என்பது சத்தியாச்சாரி என்பவரின் கருத்து. வராகமிஹிரரும் இக்கருத்தோடு உடன்படுகின்றார். ஏனென்று காரணம் ஏதும் சொல்லப்படவில்லை. பெங்களூர் சூரியநாராயணராவ் தனது பிருஹஜ் ஜாதக மொழிபெயர்ப்பில் கும்ப லக்னத்துக்கு லக்னாதிபதியே, பன்னிரண்டாமிடத்து அதிபதியாகவும் இருப்பதால் இப்படிச் சொல்லியிருக்கலாம் என்று கூறுகின்றார். அப்படியென்றால் லக்னத்துக்கு எட்டாமிடத்து அதிபதியே, லக்னாதிபதியாகவும் வரும் மேச, துலா லக்னங்களையும் அவ்வாறு மோசமான லக்னங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் அப்படி இல்லையே!
நம்மைப் பொறுத்தவரை கும்பராசி ஒரு புரியாத புதிர். கும்ப லக்னத்தில் பிறந்தவர்களோ, லக்னாதிபதி கும்பராசியில் இருக்கப் பிறந்தவர்களோ, ஒரு திறமையுமில்லாமல் சீக்கிரம் புகழ் அடைபவர்களாக இருக்கின்றார்கள். அல்லது மிக்க திறமைகள் பல இருந்தும் வெளியே தெரியாமல், குடத்துக்குள் இட்ட விளக்காய் மங்கி மடிந்து போகின்றார்கள். சிம்ம ராசிக்கும் இந்த புதிர்த்தன்மை உண்டு. ஜைமினி சூத்திரத்தில் இந்த இரண்டு ராசிகளுக்கும் விசேஷத்தன்மை சொல்லப்படுவதுண்டு.
கும்ப லக்னத்தில் பிறந்த எமது சகோதரியார் விரைவிலேயே மரணமடைந்ததும், கும்ப லக்னத்தில் பிறந்த எமது சகோதரர் ஒருவர் (வேதம் பயின்றவர். கவிஞர், பன்மொழிப் புலவர்) அவருடைய திறமைக்கு ஒத்த புகழ் வெளிச்சம் கிடைக்கப் பெறாமல் வாழ்ந்ததும், எமது தந்தையாருக்குக் கும்ப லக்னம் என்றாலே நல்லதல்ல என்ற அபிப்ராயம் வரக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் கும்ப லக்னம் நல்லதல்ல என்பது ஆரம்பகாலச் சோதிட ஆசிரியர்களின் கருத்தாகவும் இருந்திருக்கின்றது. எமது கருத்து அது ஒரு புதிரான ராசி. அவ்வளவே. நல்லது அல்லது கெட்டது என்பதைவிடப் புரியாத புதிர்களை உள்ளடக்கியது என்று வேண்டுமானால் கூறலாம். எமது தந்தையாரின் ஜாதகத்தில், லக்னாதிபதி சந்திரன், கும்பத்தில் கும்பராசி நாதனான சனியோடு சேர்க்கை. அவரது திறமைகளுக்கு, அவருக்குக் கிடைத்த மேடை சிறியதுதான்.
ஆர்வலர்களின் அனுபவத்துக்காக ஒரு ஜாதகத்தைத் தருகின்றோம். இந்த ஜாதகர் தனது 17ம் வயது முடிவதற்குள் காலமாகிவிட்டார்.


சந்திர தசையில் இருப்பு வருடம் 8 மாதம் 10 நாள் 19.
லக்னாதிபதி கும்பத்தில் இருக்கின்றது என்ற காரணத்துக்காக மட்டுமே இந்த ஜாதகம் உதாரணத்துக்காகத் தரப்பட்டுள்ளது. மற்றபடி மேச லக்னத்துக்குச் செவ்வாய் பதினோராமிடத்தில் இருப்பதற்காகத் தரப்பட்ட ஜாதகம் அல்ல. பாதகாதிபதி பற்றிய கருத்து எமக்கு ஏற்புடையதல்ல என்பதால் நாம் இவ்விளக்கத்தைத் தந்தோம்
This Week’s Quote:
The true sign of intelligence is not knowledge but imagination.
- Albert Einstein
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
