ஒரு வித்தியாசமான அனுபவத்துக்காகக் கணித மேதை ராமானுஜனின் ஜாதகத்தைக் கொஞ்சம் படிக்கலாம். ‘படிக்கலாம்’ என்பதற்கு அர்த்தம் ‘வாசிக்கலாம்’ என்பதல்ல. ஜாதகத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பார்த்துக் கணித மேதைகளின் ஜாதகம் என்றால் ‘இந்த இந்த அம்சங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வருவதைத்தான் ‘படிப்பு’ என்பதற்கான அர்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

தினமணிகதிரில் திரு. ரகமி அவர்கள் எழுதிய ‘கணிதமேதை ராமானுஜன் என்ற தொடரில் திரு. ராமானுஜன் 1887ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி மாலை 6.00 மணிக்கு ஈரோட்டில் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்கான ஜாதகம் கணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


   இராசி   பாகை   கலை      
 லக்னம்     2     08    35 
 சூர்யன்    8     08    06 
 சந்திரன்   11     10    36 
 செவ்வாய்     5     15    54 
 புதன்    7     23    00 
 குரு    7     03    23 
 சுக்கிரன்    6     22    28 
 சனி    3     13    10 (வக்ரம்)
 தசமபாவம்    11     03    18 

 

sample horoscope

sample horosope

லக்னாதிபதி புதன் செவ்வாய் வீடான விருச்சிகத்தில் 23 பாகையில் உள்ளது. நவாம்சத்தில் மகர ராசியில் உள்ளது. ஜலராசியான விருச்சிகத்தில் இடம் பெற்ற புதன் புத்திக்கும் கணித அறிவுக்கும் உரிய கிரகமாதலால் கணிதம் பற்றிய அறிவுப் பெருக்கு மற்ற யாரையும் விட இவருக்கு அதிகமாக இருந்ததில் ஆச்சரியமில்லை. புதனின் நவாம்சபதி சனி ராசியில் ஜல ராசியான கடகத்திலும் நவாம்சத்தில் வாயு ராசியான துலாத்திலும் இருந்து புதனுக்குப் பத்தாம் அம்சத்திலும் இருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்.

கணிதம் ஒரு அழகான விஞ்ஞானம். இங்கே அழகு என்பது ஒரு ஒழுங்கையும், சீரான அமைப்பையும் குறிக்கின்றது. அழகான யாவும் சுக்கிரனால் கிடைக்கப் பெறுகின்றன. மேலைநாட்டுச் சோதிடர்கள் ரிசப ராசியைக் கணிதம் பற்றிய அறிவுக்கான ராசியாகக் கொள்கின்றார்கள். ராமானுஜத்தின் ஜாதகத்தில் சுக்கிரன் புத்திக்குரிய பாவமான ஐந்தாமிடத்தில் தனது மூலத்திரிகோண ராசியில் இருப்பதால் கணிதஞானம் கைவரப் பெற்றவர் ஆனார். நவாம்சத்தில் புதன், சுக்கிரன், சனி, சந்திரன் இவர்கள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருப்பது ஜாதகத்துக்கு மேலும் வலு சேர்க்கின்றது. சந்திரன் எண்களையும் சனி தர்க்க ஞானத்தையும் குறிப்பதால் கணிதச் சமன்பாடுகள் அதிகம் படிக்காமலேயே இவரைத் தாமாக வந்தடைந்தன. நாம் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஜாதகம் ஓர் ஆய்வு என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல மேலே சொன்ன யோகங்கள் 22.12.1887ல் பிறந்த பெரும்பான்மையோருக்குப் பொருந்தும். ஆனால் ராமானுஜன் மட்டும் ஏன் கணித மேதையானார்?

புதனுக்கு லக்னாதிபத்தியம் மட்டுமின்றிக் கல்வியைக் குறிக்கும் நான்காமிடத்து ஆதிபத்தியமும் கிடைத்திருக்கின்றது. சுக்கிரனுக்குப் புத்திக் கூர்மையைத் தரும் ஐந்தாமிடத்து ஆதிபத்தியத்தோடு, மறைந்து கிடக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் பன்னிரண்டாமிடத்து ஆதிபத்தியமும் கிடைத்துள்ளது. சனி ஒன்பதுக்கு மட்டுமின்றி, உள்ளுணர்வால் (intuition) ஞானம் கிடைக்கப் பெறுகின்ற எட்டாமிடத்துக்கும் அதிபதி. நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய ராசிகளுக்கு அதிபதியான புதன், சனி, சுக்கிரன் இவர்கள் நவாம்சத்தில் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருப்பதும், இரண்டாமிடத்து அதிபதியாகிப் பத்தாமிடத்தில் பலம் பொருந்தி இருக்கும் சந்திரனும் நவாம்சத்தில் சனி, சுக்கிரன், புதன் ஆகியோருக்குக் கேந்திரத்தில் இருப்பதும், வேறு ஒருவரால் அறிய முடியாத பல உண்மைகளை இவர் அறிவார் என்பதற்குச் சான்றுகளாய் நிற்கின்றன.

பத்தாம் பாவத்தின் நவாம்சம் கடக ராசியில் அமைவதால் சனி, சுக்கிரன், சந்திரன், புதன் என்ற கிரகங்கள் யாவும் பத்தாம் பாவத்துக்கும் கேந்திரத்தில் அமைகின்றன. மேலும் மேலைநாட்டுச் சோதிடர்களால் Fortuna என்று குறிப்பிடப் பெறும் புண்யஸஹம் கன்னிராசியில் 11 பாகை, 5 கலையில் உள்ளது. இது சந்திரனுக்கு நேர் ஏழில் அமைந்திருப்பதாலும் நவாம்சத்தில் மேஷ ராசியில் இருப்பதாலும் எண்கள் பற்றிய வியக்கத்தக்க கற்பனைகளை ஜாதகருக்குக் கொடுக்கும். 

 

sample horoscope

துவாதசாம்ச சக்கரத்தில் சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து லக்னத்துக்குப் பதினோராமிடத்திலும் இருப்பதால் இவரால் சுமார் 3000 கணித சூத்திரங்களை எழுத முடிந்தது. துவாதசாம்ச சக்கரத்திலும் லக்னாதிபதி புதன் நான்குக்குடைய வியாழனோடு சேர்ந்து பன்னிரண்டில் இருப்பதும், எட்டுக்குடைய செவ்வாயும் பன்னிரண்டுக்குடைய சூர்யனோடு சேர்ந்து ஏழாமிடத்தில் இருப்பதும், ஐந்துக்குடைய சனி மூன்றாமிடத்தில் இருப்பதும், கணிதவியலைக் குறிக்கும் சுக்கிரன் பத்தாம் கேந்திரத்தில் இருப்பதும் ஜாதகரின் கணித அறிவையும், மலைக்க வைக்கும் திறமையையும் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

சந்திரன், புதன், சுக்கிரன் இவை கணிதவியல் பற்றிய அறிவையும் நான்கு, எட்டு, பன்னிரண்டாம் இடங்கள் கணிதத்தில் புதிய சூத்திரங்களைக் கொண்டு வரும் திறமையையும் குறிக்கின்றன என்று நாம் ஒரு முடிவுக்கு வரலாம். பொதுவாகச் சந்திரன் துவாதசாம்சச் சக்கரத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளில் இருக்கும் போதும், சந்திரனின் த்வாதசாம்ச அதிபதியும் மேற்கண்ட நான்கு ராசிகளில் இருக்கும் போதும், தத்துவம், கணிதஇயல், விஞ்ஞானம் பற்றிய தேடல் அந்த ஜாதகருக்கு  வருகின்றது. ஆனால் கற்பனையை விரிக்கவும், கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கும் ஜாதகர் மட்டுமே மேலான இடத்துக்கு வருகின்றார்.

 

 

This Week’s Quote:

The trouble with the world is that the stupid are cocksure and the intelligent are full of doubt.

- Lord Russell.

 

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.